
கார்த்திகை தீபம் அன்று கார்த்திகை பொரி செய்வது வழக்கம். என் வீட்டில் அவல் பொரி , நெல் பொரி செய்து படைப்பார்கள். இதில் நெய்யில் வறுத்த தேங்காய் பற்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் என் வீட்டில் இருப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
என்ன தேவை ?
நெல் பொரி – 4 கப்
வெல்லம், பொடி செய்தது – 1/2 கப் , கோபுரமாக
சுக்கு பொடி – ஒரு சிட்டிகை
ஏலக்காய் -1
கொப்பரை/ தேங்காய், பொடியாக நறுக்கியது – 4 மேஜைக்கரண்டி
நெய் – தொட்டுக்கொள்ள
எப்படி செய்வது?
- நெல் பொரியை நன்கு சுத்தம் செய்யவும், நெல் தோல், மற்றும் தூசி நிறைய இருக்கும், எல்லாவற்றையும் எடுத்து, சுத்தப்படுத்தவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில், வெல்லம் சேர்த்து, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதுமானது. வெல்லம் கரைந்ததும், ஒரு வடிகட்டளையில் ஊற்றி வடிகட்டவும்.
- பாத்திரத்தை கழுவிவிட்டு (அடியில் மண் இருக்கும்) மறுபடியும் வடிகட்டிய வெல்ல பாகை கொதிக்க வைக்கவும். பாகு நுரைத்து வரும் பொழுது, ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து, அதில் சில துளிகளை ஊற்றி விரலால் எடுத்து உருட்டும் பதம் வரும் வரை காய்ச்சவும். (பாகு உருண்டை, இலகளாக இருத்தல் வேண்டும்)
- பொரியை கொட்டி, கிளறி, நெய்யை கையில் தடவிக்கொண்டு உருண்டை பிடிக்கவும்.
உங்கள் கவனத்திற்கு
- முற்றிய பாகில் உருண்டை பிடித்தால், இன்னும் அதிக பாகு தேவைப்பாடும். பொரி உருண்டைக்கு, எப்பொழுதும், மிருதுவான உருண்டை பாகு பதம் தான் ஏற்றது.
காற்று புகா டப்பாவில் போட்டு வைக்கவும்.