தேங்காய் பொடி செய்முறை

தேங்காய் பொடி

தேங்காய் பொடி செய்முறை, ஸ்டெப் – பை- ஸ்டெப் படங்களுடன். இது, சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தோ அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
சிலர் தயிர் சாதத்திற்கும் இதை தொட்டு சாப்பிடுவார்கள். என்னை பொறுத்தவரை, தேங்காய் பொடி, தேங்காய் துவயலின் பொடி வகை என்று சொல்வேன். நான் பொதுவாக 2-3 தேங்காய் வாங்கி, இட்லிக்கு மாவு அரைக்கும் பொழுதே, கிரைண்டர் அட்டாச்மென்ட்டில் துருவி, ஜிப்லாக் கவரில் போட்டு, பிரீசரில் வைத்துவிடுவது வழக்கம்.
ஒரு வேளை அதை உடனே காலி செய்யும் நிலைமை வந்தால் இப்படி அந்த தேங்காய் துருவலை வறுத்து, துவையலோ பொடியோ செய்து விடலாம். எனக்கு எப்பொழுதும் ஒரு பால் மட்டும் எடுத்த தேங்காய் சக்கையை இப்படி செய்யலாமா என்ற எண்ணம் வரும், ஆனால் சுவை குறையுமோ என்ற பயத்தில் செய்து பார்த்தது இல்லை.

தேங்காய் பொடி தேவையான பொருட்கள்:

1 கப் தேங்காய்
1/4 கப் உளுத்தம் பருப்பு
6 சிகப்பு மிளகாய்
1 சிறிய நெல்லிக்காய் அளவு புளி
1/4 தேக்கரண்டி பெருங்காயம்
1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
உப்பு தேவைக்கேற்ப

தேங்காய் பொடி செய்முறை :

  1. முதலில் தேவையான பொருட்களையெல்லாம் தயாராக எடுத்துக்கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில், எண்ணெய் சேர்த்து, மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பையும் ஒரு நிமிடம் வறுக்கவும். step-1-ingredients
  2. புளி சேர்த்து, உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும். ஒரு தட்டில் எண்ணெயிலிருந்து வடித்து எடுத்து வைக்கவும். step-2-roast
  3. தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். நிறம் மாற ஆரம்பிக்கும் பொழுது கை விடாமல் வறுக்கவும். இல்லையென்றால் கருகிவிட வாய்ப்புள்ளது. step-3-roast
  4. தட்டில் கொட்டி ஆறவைக்கவும். மிக்சியில் முதலில் மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பையும் உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும். step-4-cool
  5. இதனுடன் கடைசியாக தேங்காய் சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும். ஆறியவுடன், டப்பாவில் போட்டு, பிரிட்ஜில் வைத்து, 2 வாரம் வரை பயன்படுத்தலாம். step-5-powder

எண்ணெய்யுடன் சேர்த்து, சாதம் அல்லது இட்லி தோசையுடன் சாப்பிடலாம்.

Author: Raks Anand

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *