
அவல் சக்கரை பொங்கல், எளிதில் விரைவாக செய்யக்கூடிய ஒன்று. சிறிய அளவில் சுலபமாக உங்களுக்கு சக்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழவேண்டும் என்றால் இது உங்களுக்கான செய்முறை.
என்னுடைய ப்ளாகில் ஏற்கனவே சிறுதானிய சக்கரை பொங்கல் பதிவிட்டுள்ளேன். அதனால் கீன்வாஹ் அல்லது அவலை வைத்து சக்கரை பொங்கல் செயது பார்க்கவேண்டும் என்று இருந்தேன். முதலில் எளிதில் செய்யக்கூடிய அவல் சக்கரை பொங்கலை செய்தேன்.
உங்களுக்கு, இதை இன்னும் சத்தானதாக செய்யவேண்டும் என்றால், சிகப்பரிசி அவல் கடைகளில் கிடைக்கிறது. அதை வைத்தும் இதே போல செய்யலாம்.
அவல் என்பதால் பொங்கல், நன்கு குழைவாக, தளர்வாக வரும். அவல் வெல்லம் சேர்ப்பதற்கு முன்பு நன்கு வேக வேண்டும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.
தேவையான பொருட்கள் :
- 1/2 கப் அவல்
- 3 மேஜைக்கரண்டி வேக வைத்த பயத்தம் பருப்பு / பாசி பருப்பு
- 1/2 கப் பொடித்த வெல்லம்
- 2 மேஜைக்கரண்டி நெய்
- 5 முந்திரி
- 10 உலர் திராட்சை
- 1 கிராம்பு
- 1 ஏலக்காய்
- 1 சிட்டிகை ஜாதிக்காய்
- 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
- 1 சிட்டிகை உப்பு
அவல் சக்கரை பொங்கல் செய்முறை:
- முதலில் அவலை ஒரு சல்லடையில் இட்டு சலித்து, மண் எதுவும் இருந்தால் சலித்து எடுத்துவிடவும். இதர தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில், பொடித்த வெல்லம் மற்றும் 1/4 கப் அளவு தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரை கலக்கவும்.
- ஒரு மெட்டல் வடிகட்டியில் வடிகட்டி, தனியே வைக்கவும்.
- அதே பாத்திரத்தை கழுவி விட்டு, ஒரு தேக்கரண்டி அளவு நெய் விட்டு, முந்திரியை இளம் பொன்னிறமாக வறுக்கவும். அதோடு கிராம்பு மற்றும் உலர் திராட்சையையும் சேர்த்து, அது உப்பும் வரை வதக்கவும். நெய்யிலிருந்து எடுத்து வைக்கவும்.
- அதே நெய்யில் அவலை சேர்த்து பொரியும் வரை வறுக்கவும்.
- அதில், 1 & 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மூடி வைத்து, நன்கு மிருதுவாக வேக வைக்கவும்.
- வெந்தவுடன், வேகவைத்த பாசி பருப்பு சேர்த்து கலக்கவும்.
- வெல்லப்பாகு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து, அதே போல 4 தேக்கரண்டி நெய்யயும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
- பொங்கல் பளபளப்பாக இறுகி வரும் பொழுது, வாசனைக்காக பொருட்களை சேர்த்து, வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து, அடுப்பை அணைக்கவும். மீதமுள்ள ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.
சூடாக பரிமாறவும்.