

அரைத்துவிட்ட சாம்பார், எனக்கு மிகவும் பிடித்த சாம்பார். தேங்காய் சேர்த்து முதல் முறை சாதத்தோடு சேர்த்து சாப்பிட செய்தேன். கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லவும் :)
சாம்பார் எப்படி செய்வது என்பதை படங்களுடன் கீழ விளக்கியுள்ளேன்
அரைத்துவிட்ட சாம்பார் செய்முறை
- துவரம்பருப்பை 1 & 1/2 கப் தண்ணீர் சேர்த்து, புளியையும் சிறு பாத்திரத்தில் அதன் நடுவே வைத்து, 4-5 விசில்கள், மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும், பருப்பை, நன்கு குழைக்கவும். புளியை தண்ணீர் சேர்த்து, கரைத்துக்கொள்ளவும். (1 கப்)

- 3 கப் தண்ணீரில், முருங்கைக்காய்(சிறிய துண்டுகளாக வெட்டவும்), முள்ளங்கி, காரட் (வட்டமாக நறுக்கவும்), அவரைக்காய் ஆகியவற்றை வேகவிடவும்.

- இதற்கிடையே, வாணலியில் நெய் சேர்த்து, சிகப்பு காய்ந்த மிளகாய் , உளுத்தம் பருப்பு, தனியா, வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்றை மிதமான தீயில், பொன்னிறமாக வறுக்கவும்

- வறுபட்டவுடன், தேங்காய் சேர்த்து, பொன்னிறமாக வறுக்கவும். ஒரு தட்டில் பரப்பி,ஆறவைக்கவும்.

- வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு சீரகம் சேர்த்து, தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- இதனை, கொதிக்கும் காய்கறிகளோடு சேர்க்கவும். காய் வெந்தவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, புளி கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

- கத்தரிக்காய், பரங்கிக்காய் எளிதில் வெந்துவிடும் காய்கள் என்பதால், இந்த நிலையில் சேர்த்தால் போதும். பருப்பையும் ஊற்றி, தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து, கொதிக்க விடவும்.

- வறுத்த பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

- கொதிக்கும் சாம்பாரில் சேர்த்து, 3-4 நிமிடம் வரை கொதிக்க விடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
